search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாகர்கோவிலில் அதிகாரிக்கு கொரோனா- தபால் நிலையம் மூடல்

    நாகர்கோவிலில் தபால் நிலைய அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தபால் நிலையம் மூடப்பட்டது. மேலும் வங்கி ஊழியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்தது. இதற்கு பலியானோர் எண்ணிக்கையும் 19-ஆக உயர்ந்தது.

    நாகர்கோவில் ரெயில்வே ரோட்டில் கம்பளம் சந்திப்பு பகுதியில் கோட்டார் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தின் அதிகாரியாக தென்காசியைச் சேர்ந்தவர் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 16-ந் தேதி வரை இந்த தபால் நிலையத்துக்கு வேலைக்கு வந்து சென்றார்.

    தகடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு தென்காசியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய தகவல் குமரி மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    அவர் கடந்த 16-ந் தேதி வரை நாகர்கோவில் கோட்டார் தபால் நிலையத்துக்கு வந்து சென்றதால், மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் உத்தரவின்பேரில் நேற்று காலை அந்த தபால் நிலையம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பின்னர் தபால் நிலையம் மூடப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என நோட்டீசும் ஒட்டப்பட்டது. தபால் நிலைய ஊழியர்கள், தபால்காரர்கள் உள்பட சுமார் 20 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கிருமி நாசினி மருந்து தெளித்து தபால் நிலையம் திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் கோட்டாரில் செயல்படும் தனியார் வங்கி ஒன்றில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் பணம் வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இவர் பணம் வசூலிப்பதற்காக தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குச் சென்று வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகளும், பின்னர் காய்ச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கொரோனா பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.

    இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவருடைய வீட்டில் நேற்று சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை தலைமையிலான ஊழியர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து அந்த வீட்டை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, நோட்டீஸ் ஒட்டினர். வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் வடசேரி தழீயபுரம் பகுதியில் 76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் தெரிய வந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய வீட்டில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×