search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விதை விற்பனை நிலையத்தில் விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா ஆய்வு செய்தபோது
    X
    விதை விற்பனை நிலையத்தில் விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா ஆய்வு செய்தபோது

    முளைப்புத்திறன் இல்லாத 51 மெட்ரிக் டன் விதைகள் விற்க தடை - அதிகாரிகள் நடவடிக்கை

    தனியார் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முளைப்புத்திறன் இல்லாத 51 மெட்ரிக் டன் விதைகள் விற்பதற்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    விழுப்புரம்:

    சான்று பெற்ற விதைகளின் இருப்பு விவரம் மற்றும் விதைகளின் தரத்தை உறுதி செய்யும் பொருட்டு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் மல்லிகா, விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விதை விவர தகவல் பலகை, இருப்பு புத்தகம், கொள்முதல் பதிவேடு, விற்பனை ரசீது ஆகியவை விதை சட்டத்தின்படி பராமரிக்கப்படுகிறதா? என்று பார்வையிட்டார். இதில் விதை சட்டத்தை மீறி செயல்பட்ட காரணத்திற்காக ரூ.2 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள 40 கிலோ காய்கறி விதைகள் விற்பதற்கு தடை செய்யப்பட்டது.

    இதுகுறித்து துணை இயக்குனர் மல்லிகா கூறுகையில், அனைத்து விதை விற்பனையாளர்களும் விதைகளை கொள்முதல் செய்யும்போது தேர்ச்சி பெற்ற விதை முளைப்புத்திறன் அறிக்கையுடன்தான் வாங்க வேண்டும். கண்டிப்பாக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம் வழங்கப்பட்ட பதிவு எண் சான்றிதழுடன் மட்டுமே அனைத்து ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களின் விதைகளை வாங்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். பதிவு எண் இல்லாமல் விதை விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால் விதை விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளர்களுக்கு தண்டனை விதிக்கப்படும்.

    மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் விதைகளின் தரத்தை உறுதி செய்ய இதுவரை நெல், கம்பு, மக்காச்சோளம், காய்கறி போன்ற பல்வேறு பயிர்களில் இருந்து 245 விதை மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முளைப்புத்திறனில் தேர்ச்சி பெறாத மற்றும் விதை சட்டத்தை மீறி செயல்பட்ட காரணத்திற்காக ரூ.48 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 51 மெட்ரிக் டன் விதைகள் விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதை விற்பனையாளர்களும் ஒவ்வொரு வியாழக்கிழமையன்று விதை இருப்பு மற்றும் விற்பனை விவரங்களை மொபைல் விதை செயலியில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து விவசாயிகளும் உழவன் செயலி மூலம் தங்களுக்கு தேவைப்படும் விதைகளின் விவரத்தை தெரிந்து வாங்கி பயன்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது விதை ஆய்வாளர் சவுந்தர்ராஜன் உடனிருந்தார்.
    Next Story
    ×