search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பத்மநாபபுரம், குழித்துறையில் கோர்ட்டு பெண் ஊழியர் உள்பட 6 பேருக்கு கொரோனா

    பத்மநாபபுரம், குழித்துறையில் கோர்ட்டு பெண் ஊழியர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    பத்மநாபபுரம்:

    மேல்புறம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண், பத்மநாபபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அவர் வழக்கம் போல் பணிக்கு சென்று வந்தார்.

    நேற்று காலை அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பத்மநாபபுரம் கோர்ட்டில் பணியில் இருந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா வார்டில் சேர்த்தனர். அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அனைவரையும் வீட்டு தனிமையில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கிடையே, பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் சுகாதார அலுவலர் ராஜாராம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கோர்ட்டு வளாகம் முழுவதும் பிளச்சிங் பவுடர் தூவியும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    இதேபோல், பாகோட்டில் இளம்பெண்ணின் கணவர் மற்றும் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    மார்த்தாண்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீன் மற்றும் காய்கறி சந்தை மூலமாக தொற்று வேகமாக பரவியது. இதனால், சாங்கை, மாமூட்டுக்கடை, விரிகோடு, கொல்லஞ்சி, கல்லுக்கூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளை மூடி அதிகாரிகள் தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் குழித்துறை நகராட்சியில் வெள்ளிவிளையை சேர்ந்த 62 வயது ஆண், 19 வயது பூ கட்டும் தொழிலாளி, நல்லூர் பேரூராட்சி ஐரேணிபுரத்தில் மீன் வியாபாரிகளான 49 வயது, 35 வயதுடைய சகோதரர்கள், பரம்பங்கரையை சேர்ந்த 40 வயது பெண் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து 5 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்த்தனர்.

    மேலும், வெள்ளிவிளை, ஐரேணிபுரம், பரம்பங்கரை பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    Next Story
    ×