search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரை படத்தில் காணலாம்.
    X
    கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரை படத்தில் காணலாம்.

    கல்லூரி-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - மாணவர் அமைப்பினர் கோரிக்கை மனு

    கல்லூரி-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட இந்து முன்னணியினர், திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஒரு யூடியூப் சேனலில் இந்து மதத்தையும், இந்து புராணங்களையும், தெய்வங்களையும், வழிபாட்டையும் தீய நோக்கத்துடன் இழிவுபடுத்தி வருகின்றனர். எனவே சாதியை பற்றியும், மதத்தை பற்றியும், இந்துக்களின் மனம் புண்படும்படி உள்ளதால், யூடியூப் சேனலை தடை செய்வதுடன், இந்து மதத்தை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அதில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோக்களையும் நீக்கி அவற்றை பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் அக்கட்சியினரும், விஷ்வ இந்து பரிஷத் சார்பிலும் புகார் மனுக்கள் கொடுத்தனர்.

    புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேந்திரன் தலைமையிலான மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் நடத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற வைக்கவேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், வழக்கம்போல் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் மதர்ஷாபாபு தலைமையில், நிர்வாகிகள் அளித்த மனுவில், நபிகள் நாயகம் அவர்களை இழிவுப்படுத்தி முகநூலில் சித்திரம் வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
    Next Story
    ×