search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி வீதிகளை குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.
    X
    கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி வீதிகளை குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

    கோத்தகிரியில் கொரோனா தொற்று - தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சுகாதார பணிகள் மும்முரம்

    கோத்தகிரியில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் குன்னூர் சப்-கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி பகுதியில் கடந்த வாரம் சுமார் 5 பேருக்கு நோய் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனை மற்றும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்களிடமிருந்து இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த சோதனையின் முடிவில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மேலும் 11 பேருக்கு நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் நேற்று முன்தினம் அவர்களில் 8 பேர் ஊட்டி அரசு கொரோனா சிறப்பு பிரிவு மருத்துவமனைக்கும், மீதமுள்ள நான்கு பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று அறிகுறி தென்பட்ட பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்தப் பகுதிகளில் தீவிர சுகாதார பணிகளை உள்ளாட்சி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட குமரன் காலனி, கேம்ப் லைன், கெட்சிகட்டி, வியூ ஹில் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும் கோத்தகிரி செயல்அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கோத்தகிரி அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் கார்த்திகா தலைமையில் அலுவலர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு கபசுர குடிநீரை வழங்கினர். மேலும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×