search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி கலெக்டர்
    X
    கன்னியாகுமரி கலெக்டர்

    காய்ச்சல் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

    குமரி மாவட்டத்தில் சளி மற்றும் காய்ச்சல் இருந்தாலும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    காய்ச்சல், இருமல், சளி, மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்த்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்.

    கொரோனா பரவல் குமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதை தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் கருதி கடந்த 1-ந் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் (ஓட்டல்களும் மருந்து கடைகளும் தவிர்த்து) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து அவ்வாறே அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை செயல்படும். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா கவனிப்பு மையங்களில் நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் மருத்துவ சிகிச்சையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.

    முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 60 பேருக்கு நேற்று அபராதமாக ரூ.6 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 62059 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் இதுவரை 8 ஆயிரத்து 524 வழக்குகள் பதிவு செய்து, 6341 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.
    Next Story
    ×