search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தமிழகத்தில் லாரிகள் 22-ந் தேதி வழக்கம் போல் ஓடும் - சம்மேளன தலைவர் குமாரசாமி தகவல்

    தமிழகத்தில் வருகிற 22-ந் தேதி வழக்கம்போல் லாரிகள் ஓடும் என நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடந்த 1987-ம் ஆண்டு நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டு, 135 கிளை சங்கங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது லாரி உரிமையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் டீசல், உதிரிபாகங்கள் உள்ளிட்டவை குறைந்த விலையில் கிடைத்திடவும், லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை களைந்து ஒற்றுமையை உண்டாக்கும் வகையில், அவர்களின் நலனுக்காக சேவையாற்றி வருகிறது.

    கடந்த 4 மாதங்களாக கொரோனா நோய் தொற்றினால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், சரக்கு வாகனங்களுக்கு போதிய லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, சுங்ககட்டண உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு, வாடகை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் லாரி தொழிலானது அழிவின் விளிம்பில் உள்ளது.

    இந்த வைரஸ் நோய் தொற்றினால் லாரி தொழில் சந்தித்துள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதில் தகுதிச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், தற்காலிகப்பதிவு உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு 30.9.2020 வரை கால நீட்டிப்பு வழங்கி உள்ளது.

    இந்த அசாதாரண சூழ்நிலையினால் சரக்கு லாரிகளுக்கு போதிய லோடு கிடைக்காததால் வாகனங்களை இயக்க முடியாமல் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தத்தில் இருந்து வரும் நிலையில் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் லாரிகள் வேலைநிறுத்தம் என தகவல் வெளியாகி வருகிறது. இதற்கும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே தமிழகத்தில் 22-ந் தேதி வழக்கம்போல் லாரிகள் ஓடும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×