search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராசுரம் மார்க்கெட் அருகே ஆய்வு செய்த கலெக்டர் கோவிந்தராவ்
    X
    தாராசுரம் மார்க்கெட் அருகே ஆய்வு செய்த கலெக்டர் கோவிந்தராவ்

    கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு- 2 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

    கும்பகோணத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது 2 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கும்பகோணத்திற்கு நேற்று காலை வந்தார். பின்னர் கும்பகோணத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    அப்போது தாராசுரம் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர், கும்பகோணம் கோட்டாச்சியர் விஜயன், தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் லட்சுமி, நகர்நல அலுவலர் பிரேமா மற்றும் அலுவலர்களுடன் கொரோனா பரவல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த விற்பனை மட்டும் செய்யப்படுகிறது. நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள், மைதானங்களில் சில்லரை விற்பனைக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களின் கூட்ட நெருக்கடி குறைக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் இருந்து தாராசுரம் மார்க்கெட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 3 பேருக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு வெளியே உள்ள சில கடைகளும் மூடப்பட்டுள்ளன. பின்னர் 300 வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி இன்று (நேற்று) 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது. கும்பகோணம் நகராட்சி பகுதியில் மார்ச் 24-ந்தேதி தொடங்கி இன்று வரை 129 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதையடுத்து தனி நபர் சமூக இடைவெளி, கைகழுவுதல், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும் நேரத்தை குறைப்பது தொடர்பாக வர்த்தகர்களுடன் கோட்டாச்சியர், நகராட்சி ஆணையர், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தாராசுரம் மார்க்கெட் அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதாக அங்குள்ளவர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து 2 டாஸ்மாக் கடைகளையும் மூட கலெக்டர் உத்தரவிட்டார். 
    Next Story
    ×