search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    யோகா, இயற்கை மருத்துவத்தால் பயனடைந்த 61 ஆயிரம் பேர்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61 ஆயிரம் பேருக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பயிற்சிகளால் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

    கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீராகும். மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எளிய முறையிலான சில ஆசனங்களும் வழி வகுக்கிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனைத் தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமணச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

    இப்பணிகளில் 200-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்ட மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதன் மூலம் இதுவரை 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர். தேவையின் அடிப்படையில் இச்சிகிச்சை முறைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

    முதல்-அமைச்சரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×