search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    டாஸ்மாக் கடைக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.8 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

    டாஸ்மாக் கடைக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.8 லட்சம் மதுபாட்டில்களை திருடிச்சென்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அச்சுதமங்கலம் பகுதியில் நன்னிலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை வழிமறித்து சோதனை செய்தனர்.

    அதில் 133 அட்டை பெட்டிகளில் 6,384 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் திருவாரூர் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி பகுதியில் உள்ள மது ஆலையில் இருந்து ராமநாதபுரம் டாஸ்மாக் மதுக்கடைக்கு ஒரு லாரியில் மதுபாட்டில்களை ஏற்றி சென்றனர். இந்த லாரியை அச்சுதமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் (வயது42) ஓட்டிச்சென்றார்.

    இவரும், தஞ்சையை சேர்ந்த நாகராஜன் (54), மன்னார்குடியை சேர்ந்த அரவிந்தன் (30), மற்றொரு அரவிந்தன் (26), வீரக்குமார் (45) உள்ளிட்டோர் சேர்ந்து லாரியை ஒரு இடத்தில் நிறுத்தி மதுபாட்டில்கள் இருந்த அட்டை பெட்டிகள் 100-க்கும் மேற்பட்டவற்றை திருடினர்.

    பின்னர் அந்த மதுபாட்டில்களை நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலத்தில் பதுக்கி வைத்து, விற்பனைக்காக சரக்கு வேனில் ஏற்றி சென்றபோது பிடிபட்டதாக போலீசார் கூறினர். இதுதொடர்பாக நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் குணசேகரன், நாகராஜன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    மதுபாட்டில்களை ஏற்றி வந்த சரக்கு வேன், அதற்கு வழிகாட்டியபடி சென்ற கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.8 லட்சம் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×