search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் முதலீடு செய்ய 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

    தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கொரோனா வைரஸ் பரவலால் உலக பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்த்திட முடிவு எடுத்துள்ளன. அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன.

    இது, பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழத்தில் முதலீடு செய்ய வருமாறு 5 முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான பெடக்ஸ், யு.பி.எஸ், சவுதி அரெம்கோ, எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன், சிபிசி பெட்ரோ கெமிக்கல் ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் தமிழகத்தில் சிறப்பான தொழில் சூழலும், சாதகமான அம்சங்கள் உள்ளதாகவும் தமிழக  முதல்-அமைச்சர்  அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  புதிய தொழில் முதலீடுகளுக்கு அரசு சிறப்பான ஆதரவு, ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×