search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறி சந்தை
    X
    காய்கறி சந்தை

    கொத்தவால்சாவடி காய்கறி சந்தை பாரிமுனைக்கு மாற்றம்

    சென்னை கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த காய்கறி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த காய்கறி சந்தை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே பிராட்வே பஸ் நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு பொதுமக்கள் முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், கூட்டம் கூட்டமாக திரிந்ததாலும் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் கொத்தவால்சாவடியில் மீண்டும் மக்கள் கூட்டம் அதிகரித்ததின் காரணமாக தங்களுக்கு மீண்டும் பிராட்வே பஸ் நிலையத்தில் சந்தை அமைத்து தர வேண்டும் என காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம், காய்கறி வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் வியாபாரிகள் கோரிக்கை ஏற்கப்பட்டு, மீண்டும் பிராட்வே பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு பாரிமுனை பேருந்து நிலையத்தில் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.  இந்நிலையில் 120க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் காலை 6 மணி முதல் 11 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட இடைவெளியில் வியாபாரிகள் இருக்கும் வகையில் தரையில் பெயிண்ட் கொண்டு கோடுகள் வரையப்பட்டன.

    மேலும் சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், வியாபாரிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் எனவும்  அப்படி முககவசம் அணியவில்லை என்றால் ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் பொது மக்களின் வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்துவருபவர்கள் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தற்போது இயங்கி வரும் சந்தையில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை  கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலார்கள் ஈடுபட்டுள்ளனர். 
    Next Story
    ×