search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்- மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்

    முழு ஊரடங்கால் தேனி மாவட்டத்தில் சந்தை மற்றும் கடைகள் அடைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
    தேனி:

    தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று தேனி மாவட்டத்தில் லாரி, கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியில் சுற்றிய நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பியதுடன் அபராதமும் விதித்தனர். இதன்காரணமாக தேனியில் உள்ள பெரியகுளம், மதுரை, கம்பம் சாலைகள் வாகன போக்குவரத்து எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்தநிலையில் தேனியில் சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, பெரியகுளம் சாலையில் 2 காய்கறி கடைகள் மற்றும் 10 இறைச்சி கடைகள் தடையை மீறி செயல்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தடையை மீறி செயல்பட்ட 10 இறைச்சி கடைகளுக்கு ரூ.9 ஆயிரத்து 700 அபராதம் விதித்தனர். மேலும் முழு ஊரடங்கு காலத்தில் கடைகள் திறக்கப்பட்டால் ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரித்தனர்.

    தேனியில் தற்காலிகமாக காமராஜர் பூங்காவில் செயல்படும் சந்தை மற்றும் கடைகள் அடைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    முழு ஊரடங்கையொட்டி தேனி மாவட்டத்தில் நேற்று மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. தேனி அருகே சுக்குவாடன்பட்டியில் செயல்படும் தற்காலிக உழவர் சந்தை மற்றும் ஆண்டிப்பட்டி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம், போடி, தேவாரம் ஆகிய பகுதிகளில் உள்ள 7 உழவர்சந்தைகள் மூடப்பட்டு இருந்தன. மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தது. கடைகள் எதுவும் திறக்கப்படாததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    Next Story
    ×