search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை பகுதியில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    திருவண்ணாமலை பகுதியில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில்1,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது - கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி மாவட்டத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு திடீரென ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    அதன்படி அவர் நேற்று திருவண்ணாமலை நகராட்சியில் காமாட்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 1,629 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 407 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா முறை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அவசர சிகிச்சைக்கு மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொற்று ஏற்பட்டு, ஆனால் அறிகுறி தென்படாதவர்கள் பிற மருத்துவமனைகள் மற்றும் தனிமை முகாம்களில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.

    அறிகுறி தென்பட்டு பாதிப்படைந்தவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. எந்த பகுதியில் அதிகமானோர் பாதிப்படைகின்றனரோ அப்பகுதியில் அதிக முகாம்கள் நடத்தப்படுகிறது. மாவட்ட எல்லைகளும் கண்காணிக்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் உள்ள ஒரு சென்டரில் இந்திய மருத்துவ முறையான சித்தா மருந்துகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலர் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் அறிகுறி இல்லாமலும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

    மற்றொரு சென்டரில் ஆங்கில முறை மருத்துவம் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரு மருத்துவ முறையின் பயனை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்திய மருத்துவ முறை நல்ல பலனை தந்துள்ளது. பலர் ஆரோக்கியமாக உள்ளனர். நோய்எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளது. சீக்கிரம் குணமடையும் வாய்ப்பும் உள்ளது.

    இந்திய மருத்துவ முறைக்கு 25 நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட வருகின்றனர். இனி வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்திய மருத்துவ முறை பயன்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×