search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி தலைமை தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஆரணி தலைமை தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    ஆரணியில் 4 ஊழியர்கள் உள்பட 27 பேருக்கு கொரோனா - தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது

    ஆரணியில் தபால் நிலைய ஊழியர்கள் 4 பேர் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது.
    ஆரணி:

    ஆரணி, தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதி முடிவுகள் நேற்று வெளியாயின.

    இதில் ஆரணி ஏ.சி.எஸ். கார்டனை சேர்ந்த 28 வயது பெண் ஊழியருக்கும், போளூரில் இருந்தும் வடமாதிமங்கலத்தில் இருந்து ஆரணிக்கு வரும் அலுவலர்கள் 2 பேருக்கும், ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஒண்ணுபுரம் தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியருக்கும் தொற்று உறுதியானது. இதனையொட்டி ஆரணி தலைமை தபால் நிலையம், ஒண்ணுபுரம் தபால் நிலையமும் மூடப்பட்டது.

    மேலும் ஆரணி நகரில் சத்தியமூர்த்தி ரோட்டை சேர்ந்த வாலிபருக்கும், சைதாப்பேட்டை கமண்டல நாகநதி தெருவை சேர்ந்த ஆணுக்கும், லிங்கப்பன் தெருவை சேர்ந்த ஆணுக்கும், ஷராப் பஜார் பெருமாள் தெருவை சேர்ந்த பெண்ணிற்கும், காந்தி ரோட்டை சேர்ந்த ஆணுக்கும், சைதாப்பேட்டை அனந்தபுரம் தெருவை சேர்ந்த வாலிபருக்கும், பையூர் எம்.ஜி.ஆர்.நகரில் 2 பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆணுக்கும், அவரது தாய், மகளுக்கும், 2 வயது குழந்தைக்கும் மற்றும் அடையபுலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், மருசூரை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், ஒகையூரை சேர்ந்த வாலிபருக்கும், வடுகசாத்தை சேர்ந்த வாலிபருக்கும், சேவூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ஆண், கனகம்பட்டை சேர்ந்த ஒருவர், கீழ்நகரை சேர்ந்த பெண், கொங்கராம்பட்டை சேர்ந்த தாய், மகள்கள் 3 பேர் ஆக மொத்தம் 27 நபர்களுக்கு நேற்று ஒரே நாளில் தொற்று உறுதியாகி உள்ளது.

    சம்பந்தப்பட்டவர்களை சுகாதாரத்துறையினர், காவல்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி, ஆரணி அரசு மருத்துவமனை, தச்சூர் அறிஞர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விடுதி, திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி, பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை ஆகிய பகுதிகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    கண்ணமங்கலம் மதுரா கொங்கராம்பட்டு கிராமம், ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வசிக்கும் 18 வயது வாலிபர், 40 வயது பெண், இவரது 11 வயது மகள் ஆகிய 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொங்கராம்பட்டு கேட் பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் தனிமைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் 30 பேருக்கு சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

    மேலும் ஒண்ணுபுரம் தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் இங்கு பணிபுரியும் 18 பேருக்கு சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர்.

    போளூரில் உள்ள ரோஷன் நகரில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுப்பாட்டு பகுதியான அப்பகுதியில் வட்டார மருத்துவர் சுந்தர் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன் மற்றும் பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 37 வயது பெண், அவரது 17 வயது மகன், 45 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் வெண்மணி கிராமத்தில் 52 வயது ஆண், அய்யம்பேட்டையில் 40 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் 5 பேரும் போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் போளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வரும் பிறமாநில மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி சென்னை, பெங்களூரு பகுதிகளில் இருந்து வந்த 19 பேரை தாசில்தார் ஜெயவேல் முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்துள்ளார். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
    Next Story
    ×