search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுங்கான்திடல் வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடப்பதை காணலாம்
    X
    சுங்கான்திடல் வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடப்பதை காணலாம்

    புதர் மண்டிக்கிடக்கும் சுங்கான்திடல் வாய்க்கால்- 366 ஏக்கர் சாகுபடி பாதிப்பு

    தஞ்சை அருகே சுங்கான்திடல் வாய்க்கால் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் 366 ஏக்கர் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்து அங்கிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக 16-ந் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் வெண்ணாற்றில் இருந்து திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வடவாறாக பிரிந்து செல்கிறது. இந்த வடவாறு தஞ்சை, அம்மாப்பேட்டை வழியாக செல்கிறது. இந்த வடவாற்றில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால சுங்கான்திடல் வாய்க்கால். இந்த வாய்க்கால் தஞ்சையை அடுத்த கோடியம்மன்கோவில் வழியாக சென்று வெண்ணாற்றில் கலக்கிறது.

    இந்த வாய்க்கால் மூலம் 366 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. இந்த வாய்க்காலில் ஒரு பகுதி மட்டும் சுங்கான்திடல் பகுதியில் தூர்வாரப்பட்டுள்ளது. இதர பகுதிகள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சுங்கான்திடல் வாய்க்கால் தலைப்பு பகுதியில் இருந்து சுங்கான்திடல் வரைக்கும் புதர்கள் மண்டியும், ஆகாயத்தாமரைகள் நிறைந்தும் காணப்படுகின்றன.

    கல்லணை திறக்கப்பட்டு 26 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்த வாய்க்காலில் இன்னும் தண்ணீர் வரவில்லை. அதையும் மீறி தண்ணீர் வந்தாலும் வாய்க்கால் சென்று பாசனத்துக்கு பயன்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்த அளவிற்கு வாய்க்கால் முழுவதும் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இதனால பாசன வசதி பெறும் வயல்கள் அனைத்தும் தரிசாக காட்சி அளிக்கிறது. ஒரு சில இடங்களில் மட்டும் பம்ப்செட் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “சுங்கான் திடல் வாய்க்காலை பல ஆண்டுகளாக தூர்வாருமாறு கோரி வருகிறோம். ஆனால் தூர்வாரப்படவில்லை. இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் நாங்கள் சாகுபடியை முழுவீச்சில் செய்வதற்காக தயாராக இருந்தோம். ஆனால் தற்போது பாசன வாய்க்கால்கள் செடிகள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வருமா, அப்படியே வந்தாலும் பாசனம் செய்யும் அளவிற்கு தண்ணீர் வருமா? என்பது சந்தேகம் தான். ஏதோ பெயரளவுக்கு வாய்க்காலின் ஒரு பகுதியில் மட்டும் தூர்வாரப்பட்டுள்ளது. எனவே ஆற்றில் ஆக்கிரமித்துள்ள செடி,கொடிகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”என்றனர்.
    Next Story
    ×