search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா தொற்று பரவல்: வடசேரியில் 6 பாதைகளுக்கு சீல் வைப்பு

    நாகர்கோவிலில் வடசேரியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து 6 பாதைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் வடசேரியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அருந்ததியர் தெருவில் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் என பலருக்கும் தொற்று பரவியது.

    அந்த தெருவை ஒட்டியுள்ள காமராஜபுரம், மரச்சீனிவிளை உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா பரவியது. இந்த 3 பகுதிகளிலும் மொத்தம் 16 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அருந்ததியர் தெருவில் மொத்தம் 118 குடும்பங்களை சேர்ந்த 455 பேரும், மரச்சீனிவிளையில் 129 பேரும், காமராஜபுரத்தில் 250 பேரும் வசித்து வருகின்றனர். இந்த 3 இடங்களும் மக்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய பகுதியாகும். இதனால் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை ‘சீல்‘ வைக்க கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.

    இதனையடுத்து நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வடசேரி போலீசார் அந்த பகுதிகளுக்கு நேற்று சீல் வைக்க சென்றனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் கூலி வேலை செய்து வருவதாகவும், வேலைக்கு செல்லாவிட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து நகர்நல அதிகாரி கின்சால் அங்கு விரைந்து சென்றார். பின்னர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதிபட தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனையடுத்து அருந்ததியர் தெரு, மரச்சீனிவிளை மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 6 வழிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் அனைத்து மக்களுக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
    Next Story
    ×