search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளிர்சாதன எந்திரம் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து கிடப்பதை படத்தில் காணல
    X
    குளிர்சாதன எந்திரம் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து கிடப்பதை படத்தில் காணல

    கரூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் குளிர்சாதன எந்திரம் வெடித்து தீ விபத்து

    கரூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் குளிர்சாதன எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின.
    கரூர்:

    கரூர் வளையல்காரத்தெருவை சேர்ந்தவர் காளஸ்வரன் (வயது 27). இவரது மனைவி மனோசித்ரா (25). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் காளஸ்வரன், மனைவியுடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மழை பெய்ததால், மின்சாரம் அடிக்கடி தடைபட்டு வந்துள்ளது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு, ஹாலில் படுத்து தூங்கி உள்ளனர்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் படுக்கையறையில் இருந்து அதிகளவு புகை வெளியேறி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் எழுந்து சென்று படுக்கையறையின் கதவை திறந்துள்ளனர். அப்போது படுக்கையறையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. இவர்கள் கதவை திறந்ததும் ஹால் மற்றும் சமையலறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் தீ பரவியது.

    உடனடியாக சுதாரித்துக்கொண்ட காளஸ்வரனும், மனோசித்ராவும் வெளியே வர முயன்றுள்ளனர். ஆனால் சாவி இருந்த பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், சாவியை எடுக்க முடியவில்லை. இதையடுத்து 2 பேரும் கதவின் தாழ்ப்பாளை உடைத்து, வெளியே வந்தனர். வீடு முழுவதும் தீ பரவி புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் வீட்டில் இருந்த வாஷிங் மெஷின், லேப்டாப், பிரிட்ஜ், செல்போன் உள்பட பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    இதுகுறித்து காளஸ்வரன் கரூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், மின்சாரம் அடிக்கடி தடைபட்டு வந்துள்ளது. அப்போது அதிக மின்னழுத்தம் காரணமாக காளஸ்வரன் வீட்டு படுக்கையறையில் இருந்த குளிர்சாதன எந்திரம் (ஏர்கூலர்) வெடித்ததில், தீப்பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×