search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரவுக்கோட்டை பகுதியில் வயலில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதை காணலாம்
    X
    வரவுக்கோட்டை பகுதியில் வயலில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதை காணலாம்

    தஞ்சையில் கொட்டித்தீர்த்த மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

    தஞ்சை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை நீரில் குறுவை நெற்பயிர்கள் மூழ்கின.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்று பரவலாக மழை கொட்டியது.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பெய்த மழையினால் கடந்த 10 நாட்களுக்குள் நடவுசெய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தஞ்சையை அடுத்த காட்டூர், வரவுக்கோட்டை, கத்தரிநத்தம், சூரக்கோட்டை, மடிகை, தலையாமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.

    நேற்று காலை முதல் மழை இன்றி வெயில் காணப்பட்டதால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடியத்தொடங்கியது. மழை காரணமாக வல்லம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழைநீர் வல்லம் வாரி வடிகாலில் பெருக்கெடுத்து ஓடியது.

    கத்தரிநத்தம், கம்பர்நத்தம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய பயிர்களை தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் தாழ்வான வயல்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது 85 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளன. இன்னும் 10 நாட்களில் சாகுபடி இலக்கு எட்டப்படும். மழை காரணமாக விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:-

    வெட்டிக்காடு-84, வல்லம்-79, கும்பகோணம்-78, குருங்குளம்-74, ஒரத்தநாடு-64, மதுக்கூர்-59, பாபநாசம்-57, தஞ்சை, பூதலூர்-48, நெய்வாசல் தென்பாதி-39, திருவிடைமருதூர்-36, பட்டுக்கோட்டை-34, அணைக் கரை-28, அய்யம்பேட்டை-27, ஈச்சன்விடுதி-17, திருவையாறு, மஞ்சளாறு-14, அதிராம்பட்டினம்-13, திருக்காட்டுப்பள்ளி-8, கல்லணை-7, பேராவூரணி-6.
    Next Story
    ×