search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

    விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயிர்களை பலிவாங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா ஆலத்தூரை சேர்ந்த 52 வயதுடைய நபர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், இருமலால் மிகவும் அவதிப்பட்டார். ஏற்கனவே சர்க்கரை நோயால் சிகிச்சை பெற்று வந்த அவர் சுவாசிக்கவும் சிரமப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் நேற்று முன்தினம் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருடைய உமிழ்நீர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதன் முடிவில் அவர், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி காலை 6.30 மணியளவில் இறந்தார்.

    இதேபோல் விழுப்புரம் மாசிலாமணிபேட்டை பகுதியை சேர்ந்த 58 வயது பெண், திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர், கடந்த 6-ந் தேதி மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதனிடையே அவர் 8-ந் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அன்று மாலை இறந்தார். இந்நிலையில் நேற்று இவருடைய மருத்துவ பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்றதில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் இறந்த 2 பேருடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×