search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த மகன்-தந்தை
    X
    உயிரிழந்த மகன்-தந்தை

    ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை

    சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு குறித்து அவர்களின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    சாத்தான்குளம்:

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.

    டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் நேற்று மதுரை வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைத்தார்.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வழக்கு தொடர்பாக சில தகவல்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்த விசாரணை ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி ஜெயில் உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தடயங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டு சரிபார்த்தனர்.

    வாக்குமூலங்களை ஒவ்வொரு பக்கமாக பார்த்து பதிவு செய்து கொண்டனர். இந்த பணி இரவு 9 மணி வரை நீடித்தது. மேலும், சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அதேபோன்று கைது செய்யப்பட்ட 10 போலீசாரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக மதுரை கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் விரைவில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை தொடங்கி உள்ளனர். ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணை நடைபெற்றது.

    முன்னதாக இவ்வழக்கு தொடர்பான சிசிடிவி சாட்சிகள் மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. 
    Next Story
    ×