search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு

    வால்பாறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    வால்பாறை:

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வால்பாறைக்கு வரும் நபர்களை கண்காணிக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு போலீசார், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் இ-பாஸ் இல்லாமல் வருவோர் சோதனைச்சாவடிகளில் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் இ-பாஸ் பெற்று வருபவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 500 பேர் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ குழுவினர் மூலமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வால்பாறை துணை தாசில்தார் மூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கவின், போபி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் வீடுகளில் உள்ளனரா?, ஏதாவது உடல் ரீதியாக பாதிப்புகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் வீடுகளை விட்டு வெளியே நடமாடி கொண்டிருந்தவர்களை எச்சரித்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அப்போது எந்த ஒரு காரணத்திற்காகவும் வெளியே செல்ல வேண்டுமானால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தனிமைப்படுத்த பகுதிகளில் இருந்து யாராவது வெளியே வந்து சுற்றித்திரிந்தால் ஸ்டிக்கரில் குறிப்பிட்டு உள்ள செல்போன் எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார தலைமை டாக்டர் பாபுலட்சுமண் தலைமையில் மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மருந்துகளை வழங்கினார்கள்.
    Next Story
    ×