search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராமநாதபுரம், சிவகங்கையில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழப்பு

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகினர். நேற்று ஒரேநாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எம்.எல்.ஏ. குணமடைந்து வீடு திரும்பினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,502 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 18 பேருக்கும், கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 13 பேருக்கும், பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 7 பேருக்கும், மண்டபம் சுற்று வட்டார பகுதிகளில் 4 பேர் உள்பட 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மொத்தம் 305 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 62 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த நாட்களை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக பரிசோதனை செய்தும் குறைந்த அளவில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது. இதில் பரமக்குடி தாசில்தார், கீழக்கரை முகாம் அலுவலக போலீஸ்காரர், ராமநாதபுரம் நகர் காவல் நிலைய பெண் போலீஸ், இளஞ்செம்பூர் போலீஸ் நிலைய காவலர், ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,564 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த 70 வயது பெண் ஆகியோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், ராமநாதபுரத்தை சேர்ந்த 72 வயது முதியவர் கோவை மருத்துவமனையிலும், பரமக்குடியை சேர்ந்த 70 வயது பெண் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், சாயல்குடி பெரியகுளத்தை சேர்ந்த 71 வயது நபர் அவரது வீட்டிலும் என மொத்தம் 5 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ஒருபுறம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நி்லையில் மறுபுறம் தொடர்ந்து 2 நாட்களாக பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர் சிகிச்சை முடிந்து குணமடைந்து நேற்று வீடுதிரும்பினார்.

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர் பூரண குணமடைந்ததையடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சூரியநாராயணன், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன் மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×