search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி பொறியாளர் பிரிவு தடுப்பு வைத்து அடைப்பு
    X
    மாநகராட்சி பொறியாளர் பிரிவு தடுப்பு வைத்து அடைப்பு

    ஒப்பந்ததாரருக்கு கொரோனா உறுதி - மாநகராட்சி பொறியாளர் பிரிவு தடுப்பு வைத்து அடைப்பு

    ஒப்பந்ததாரருக்கு கொரோனா உறுதி - மாநகராட்சி பொறியாளர் பிரிவு தடுப்பு வைத்து அடைப்பு
    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவர் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தின் பொறியாளர் பிரிவு மற்றும் கணக்கு பிரிவுக்கு வந்து அதிகாரிகளுடன் பேசி விட்டு சென்றார். அவர், ஏற்கனவே அன்றைய தினம் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டுள்ளார். சோதனை முடிந்த பின்னர்தான், மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு அவர் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அன்று இரவு 10 மணிக்கு, ஒப்பந்ததாரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் மாநகராட்சி அலுவலகம் வந்து சென்ற இடங்களுக்கு நேற்று காலை 10 மணி முதல் 11 மணிவரை பணியாளர்களால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த வேளையில் ஊழியர்கள், அதிகாரிகள் அலுவலகத்திற்கு உள்ளே வராதபடி, அலுவலகத்தின் ஒரு பகுதி மட்டும் தடுப்பு வைத்தும், மேஜையை வைத்தும் அலுவலக வாசல் அடைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அவை அகற்றப்பட்டு, வழக்கம்போல அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் பணியை தொடர்ந்தனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. ஒப்பந்ததாரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு வைத்து அடைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அலுவலக பணி நடந்தது’ என்றார்.
    Next Story
    ×