search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தப்பி ஓட்டம் - தொற்று இல்லாதவரை மாற்றி அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை

    திருச்சியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தப்பி ஓடினார். தொற்று இல்லாதவரை சுகாதாரத்துறையினர் மாற்றி அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருச்சி:

    சவுதிஅரேபியாவின் ரியாத்தில் இருந்து கடந்த 4-ந் தேதி நள்ளிரவு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை தனிமைப்படுத்தும் பொருட்டு, திருச்சியில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் சுகாதாரத்துறையினர் தங்க வைத்தனர். இந்த பயணிகளிடம் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனைக்காக ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது. அதில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறையினர் ஒவ்வொரு ஓட்டலுக்கும் சென்று தொற்றுக்கு ஆளான 12 பேரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ராக்போர்ட் வியூ ஓட்டலில் தங்கி இருந்தவர்களில் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் இருந்த பெயர் உடைய நபரிடம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும்படி அழைத்தனர். அந்தநபரோ, தனக்கு தொற்று இல்லை என்றும், அது குறித்த குறுஞ்செய்தி எதுவும் தனது செல்போனுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்றதும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நபர்களின் முகவரியை வைத்து சோதித்தபோது, தொற்று பாதிப்புடைய நபர் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் என்பதும், இவர்கள் ஓட்டலில் இருந்து அழைத்து வந்தவர் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இருவருக்கும் ஒரேபெயர் என்பதால் கொரோனா பாதித்தவரை அழைத்து வருவதற்கு பதிலாக, மற்றொருவரை அழைத்து சென்றதும் தெரியவந்தது.

    மேலும், கொரோனா பாதிப்புக்குள்ளான அந்த நாகை வாலிபர் தனிமைப்படுத்தப்பட்ட ஓட்டலில் இருந்து சிகிச்சைக்கு செல்லாமல் தப்பி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தவறுதலாக அழைத்து சென்ற வாலிபரை கொரோனா வார்டில் வைக்காமல் அங்குள்ள தனிமைப்படுத்தும் வார்டில் வைத்தனர். அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் என வந்தால் உடனே வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என்றும், மேலும், கொரோனா பாதிப்புடன் தப்பி சென்றவரை பிடிக்க நாகை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×