search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விழுப்புரம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து தொழிலாளி தப்பி ஓட்டம்

    விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து தொழிலாளி தப்பி ஓடிவிட்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தென்கோடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 43 வயதுடைய கூலித்தொழிலாளி. இவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் அவர் கடந்த மாதம் 22-ந் தேதி விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருடைய உமிழ்நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதன் முடிவு மறுநாள் (அதாவது 23-ந் தேதி) வந்தது. இதில் அவர், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த தொழிலாளிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர் அனுமதிக்கப்பட்ட கொரோனா வார்டுக்கு டாக்டர் சென்றபோது அவரை திடீரென காணவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வந்த அவர், இன்னும் ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக இருந்த நிலையில் திடீரென தப்பி ஓடியிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் அந்த தொழிலாளியை கண்டுபிடித்து அவரை மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பதற்காக போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் அந்த தொழிலாளி, தனது வீட்டில் பதுங்கியிருப்பதாக கிளியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தென்கோடிப்பாக்கத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அந்த தொழிலாளி, தனது வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். உடனே அவரை தூக்கத்தில் இருந்து போலீசார் தட்டி எழுப்பினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

    விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனது மனைவி, குழந்தைகளை பார்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், அவர்களை பார்க்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும், அதனால் மருத்துவமனையில் இருந்து வந்து விட்டதாகவும் கூறினார்.

    இதை கேட்டறிந்த போலீசார், அந்த தொழிலாளிக்கு தகுந்த அறிவுரை கூறினர். பின்னர் அவரை அங்கிருந்து மீண்டும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கொரோனா வார்டில் அனுமதித்தனர்.

    இதனிடையே அந்த தொழிலாளி நேற்று முன்தினம் இரவில் இருந்து மதியம் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த சூழலில் மதியம் 2.30 மணியளவில் அவர் மீண்டும் மருத்துவமனையில் இருந்து மாயமானார்.

    அவர் எங்கு சென்றார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதோடு அவரை கண்டுபிடித்து மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பதற்காகவும், அவரால் மற்றவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கவும் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளியை போலீசார் கண்டுபிடித்து தகுந்த அறிவுரை கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் மீண்டும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×