search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த தங்கமணி
    X
    உயிரிழந்த தங்கமணி

    வானூர் அருகே மின்கம்பம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி

    வானூர் அருகே மின்கம்பம் அமைக்கும்போது கம்பம் முறிந்து விழுந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே வி.பரங்கனி முதல் திருவக்கரை வரை சாலையோரம் உள்ள பழைய மின்கம்பங்களுக்கு பதிலாக புதிதாக மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் செஞ்சியை சேர்ந்த 10 பேர் உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று மாலை 4.30 மணியளவில் வி.பரங்கனி பகுதியில் செஞ்சியை சேர்ந்த தங்கமணி (வயது 24), பிரகாஷ் (22) ஆகியோர் புதிதாக நடப்பட்ட மின்கம்பத்தின் மீது ஏறி, உச்சியில் மின்கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து, கம்பம் முறிந்து விழுந்தது.

    இதில் மின்கம்பத்தின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்த தங்கமணி, பிரகாஷ் ஆகியோர் கீழே விழுந்ததில், அவர்களை மின்கம்பம் அமுக்கியது. இதில் படுகாயமடைந்த தங்கமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். கவலைக்கிடமான நிலையில் பிரகாசை சக ஊழியர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஆனால் சம்பவ இடத்துக்கு போலீசார், மின்துறை அதிகாரிகள் யாரும் உடனடியாக வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் திருவக்கரை - பெரும்பாக்கம் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து சென்ற டிப்பர் லாரிகள் அணிவகுத்து நின்றன.

    இதையடுத்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் வானூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தங்கமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் போலீசாரின் சமரசத்தை ஏற்க மறுத்து, தங்கமணியின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×