search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆரணி அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி- 3 பேர் கைது

    ஆரணி அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35), விவசாயி. இவரும், இவரது உறவினரான ஆத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரும் நேற்று முன்தினம் இரவு காட்டேரி கிராமத்தில் குமார் என்பவருடைய நிலத்தில் முயல் வேட்டைக்காக சென்றிருந்தனர். ராஜாவின் நிலத்தை காட்டேரி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்துள்ளார்.

    அந்த நிலத்தில் பன்றி தொல்லையின் காரணமாக மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது. இதற்கு செல்வத்துக்கு பக்கத்து நிலத்தை சேர்ந்த மாமண்டூரை சேர்ந்த ஏழுமலை, ராஜி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    ஏழுமலை நிலத்திற்கு உள்ளே சென்றவர் நீண்டநேரமாக வெளியில் வரவில்லை. இதனால் ராஜா கனிகிலுப்பை கிராமத்தில் உள்ள உறவினர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். பின்னர் மின் இணைப்பை துண்டித்துவிட்டு நிலத்தில் சென்று தேடிப் பார்த்தனர். அப்போது ஏழுமலை காலில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பது தெரிய வந்தது.


    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்வேலியில் சிக்கி இறந்த ஏழுமலையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நிலத்தில் மின்வேலி அமைத்த செல்வம் மற்றும் ஏழுமலை, ராஜி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×