search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கொரோனா பரவலை தடுக்க குமரியில் வீடு வீடாக பரிசோதனை- சுகாதாரத்துறை அதிரடி

    கொரோனா பரவலை தடுக்க குமரியில் வீடு வீடாக, பரிசோதனை நடத்த சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட தொற்று பொதுமக்களையும் பாதித்தது. நோயால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 35 வியாபாரிகளின் குடும்பத்தினருக்கு கொரோனா வந்துள்ளது.

    அதேபோன்று அப்டா மார்க்கெட்டில் சிலரும், கோட்டார் மார்க்கெட்டில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மட்டும் அல்லாமல் பக்கத்து கிராமங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

    நாகர்கோவிலில் வடசேரி, அறுகுவிளை, இருளப்பபுரம், கிருஷ்ணன்கோவில், மேலத்தெருகரை, கொல்லவிளை, ஹென்றி ரோடு, வடசேரி காந்தி அம்மன் கோவில் தெரு, காமராஜர்புரம், கிருஷ்ணன்கோவில் தெலுங்கு செட்டி தெரு, சி.எஸ்.ஐ. சர்ச் தெரு, ஏசுவடியான் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கொரோனா நோயாளிகள் உள்ளனர். எனவே அந்த பகுதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளன. அங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள தெற்கு சூரங்குடி, மணிக்கட்டி பொட்டல், திக்கிலான்விளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மளமளவென பரவி வருவதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

    எனவே குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களை முழுமையாக கண்டுபிடித்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் பரிசோதனை நேற்று தொடங்கியது. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை மூலம் முழுவதும் இந்த பரிசோதனை நடைபெற்று வருகிறது. சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த பணியில் மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே காய்ச்சல் பரிசோதனை இரண்டு கட்டங்களாக நடந்தது. அதில் பலருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனையானது இன்னும் ஒரு வாரத்துக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள்.

    எனவே பொதுமக்கள் தங்களுக்கு சளி அல்லது காய்ச்சல் இருந்தால் மறைக்காமல் தகவல் தெரிவித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.
    Next Story
    ×