search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழங்கால நாணயங்கள்.
    X
    பழங்கால நாணயங்கள்.

    மதுரை அருகே பழங்கால பொருட்கள், நாணயங்கள் கண்டெடுப்பு

    மதுரை அருகே பழங்கால பொருட்கள், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
    செக்கானூரணி:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலத்தில் உள்ள ஏகநாதர் சுவாமி ஜீவசமாதி மடம் உள்ளது. இந்த மடத்தை அருளானந்தம் சுவாமிகள் பராமரித்து வருகிறார். இந்த மடத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், சிற்பக்கலை, உலோக சிலைகள், ஓவியக்கலை, போர் கருவிகள் தயாரிப்பு, ராஜயோகம் உள்பட 16 வகையான பயிற்சிகளை அளிக்கும் இடமாக இருந்துள்ளது. ஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து பாண்டிய மன்னரை சந்திக்கும் முன்னர் இந்த மடத்தில் தங்கியிருந்ததாக செவிவழி செய்தி உள்ளது. மேலும் பாரதியார், மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேரும் முன்னரும், பணியில் இருந்து விலகிய பின்னரும் சிறிது காலம் இந்த மடத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, இந்த பயிற்சி பள்ளி மூடப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்திருந்த கலை மற்றும் தொல் பொருள் வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் மற்றும் ஆய்வாளர்கள் ராஜவேல், ஆனந்தன் இந்த ஜீவசமாதி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை கொண்ட ஒரு கல் தூணை கண்டுபிடித்தனர். அதனை ஆய்வு செய்த போது, அதில் இலக்கியங்களில் மட்டுமே உள்ள கோட்டம் என்ற வார்த்தையுடன் “ஏகன் ஆதன் கோட்டம்“ என எழுதப்பட்டிருந்தது. மேலும் அங்கு தமிழ் வட்டெழுத்துக்கள் கொண்ட ஒரு கல்லை கண்டுபிடித்தனர். அதில் “இறையிலியாக ஏகநாதர் பள்ளிபடை மண்டலி ஈந்தார்” என எழுதப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

    அந்த பொருட்கள் குறித்து கோவில் நிர்வாகி அருளானந்தம் சுவாமி கூறும்போது, மாட்டின் தலைபோல் செய்யப்பட்ட கொம்பு, நாதஸ்வரம் போல் வெள்ளி மற்றும் ஐம்பொன் கலந்து செய்யப்பட்ட இசை வாத்தியம், உடையாத மண் பானை, மிகச்சிறிய சிவலிங்கம், எழுத்தாணி, மான் கொம்பு, பழங்கால நாணயங்கள், விலங்குகளை வேட்டையாட பழங்கால கருவிகளில் பயன்படுத்தப்படும் கல் வகை, ஓடுகள் என பல பொருட்கள் இருந்தன.

    வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், இந்த பகுதியை ஆய்வு செய்தால் கீழடியை போன்று தமிழர்களின் வரலாற்றை கூறும் பல்வேறு பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது, என்றார்.
    Next Story
    ×