search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி
    X
    நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி

    திருப்பூர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கிருமி நாசினி தெளிப்பு - மாநகராட்சி கமிஷனர் தகவல்

    திருப்பூர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் மாவட்டத்தில் உயர தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக வெளிப்பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வருகிறவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறோம். கொரோனா படுக்கைகளும் கூடுதலாக அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே கிருமிநாசினி மாநகராட்சி பகுதிகளில் முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனியாக அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் சுழற்சி முறையில் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களில் சென்று கிருமிநாசினி தெளிக்கிறார்கள். சிலர் கை எந்திரங்களை பயன்படுத்தியும் அடித்து வருகிறார்கள்.

    தற்போது மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளிலும் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசின் வழிகாட்டுதல்களை மற்றும் பின்பற்றினால் போதும். விரைவில் தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×