search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஷா சத்குரு
    X
    ஈஷா சத்குரு

    தமிழ்நாடு கொரோனாவில் இருந்து விரைவில் வெளிவர வேண்டும்: குரு பெளர்ணமி நாளில் சத்குரு விருப்பம்

    தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் வெற்றிகரமாக வெளி வர வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விருப்பம் தெரிவித்துள்ளார்.
    நம்கலாச்சாரத்தில், ஆதியோகியான சிவன் ஆதிகுருவாக மாறி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பகிர்ந்து கொண்ட நாள் குரு பெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, குரு பெளர்ணமி தினமான இன்று (ஜூலை-5) சத்குருவின் சிறப்பு தமிழ் சத்சங்கம் காலை 7 மணிக்கு ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

    இதில் சத்குரு பேசியதாவது:-

    குரு பெளர்ணமி நாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அன்பும் அருளும் நிறைந்த வாழ்த்துக்கள். குரு பெளர்ணமி தட்சிணாயணத்தில் வரும் முதல் பெளர்ணமி. இந்த நாளில் ஆதியோகி நம் தென்னிந்தியாவை நோக்கி அமர்ந்தார். தென்திசை பார்த்து அமர்ந்ததால் அவருக்கு தட்சிணாமூர்த்தி என்றும் பெயர் கொடுத்தார்கள்.

    அவர் தற்செயலாக தென்திசை நோக்கி அமரவில்லை. நமக்கும், பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான தொடர்பானது ஜூன் 21-ம் தேதிக்கு பிறகு தென் திசை நோக்கி நடக்கிறது. பூமியில் உள்ள எல்லா ஜீவராசிகளின் உயிர் நடக்க வேண்டுமென்றால் அதற்கு சூரியனின் சக்தி வேண்டும். இதனால் தான் சூரியன் எடுத்த திசையிலேயே ஆதியோகியும் அமர்ந்தார்.

    இப்போது கொரோனா வைரஸ் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் உயிர்களை நாம் இழந்துள்ளோம். ஏராளமானோர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். பலர் தங்களின் அன்புகுரியவர்கள், நெருக்கமானவர்கள் உயிரிழந்தபோதும் கூட அவர்களை இறுதியாக ஒருமுறை நேரில் பார்க்க முடியாத அளவுக்கு கடினமான சூழ்நிலை நிலவுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 3 மாதமாக ஊரடங்கால் நம் பொருளாதாரம் பெரும் சேதாரத்துக்கு உள்ளாகி உள்ளது.

    இத்தகைய சூழலில் யோகா ஏன் அவசியம் என்றால், நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திதான் ஒரு பாதுகாப்பு கவசம். கவசம் வலுவாக இல்லாவிட்டால் எந்த மருத்துவர் வந்தாலும், எந்த மருந்தை உட்கொண்டாலும் அதுவேலை செய்ய முடியுமா?

    இதை மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அறிவியல்பூர்வமாக சோதனை செய்து சொல்கின்றனர். தமிழக அரசும் கூட அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து வருகிறது.

    கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய்க்கு ஒரே தீர்வு இதுதான். அரசாங்கமும் மருத்துவர்களும் இதை தொடர்ந்து சொல்லியே வந்துள்ளார்கள். இருந்தாலும் நான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.

    வைரஸ் தானாக எங்கு பரவிவிடவில்லை. அது நம் மூலமாகத்தான் பரவ முடியும். குருபெளர்ணமி நாளில் தமிழ் மக்கள் அனைவரும் இந்த உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். வைரஸ் உங்களுக்கு வராமல் இருக்க தேவையான அளவுக்கு உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி வைத்துகொள்ளுங்கள்.

    ஒருவேளை ஏதோ ஒரு காரணத்தால் உங்களுக்கு வைரஸ் வந்துவிட்டால், ‘‘என் உடலில் இருந்து மற்ற உடல்களுக்கு அதுபோக கூடாது’’ என்ற ஒரு உறுதியை நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

    தமிழ் மக்கள் அனைவரும் இந்த உறுதியை ஏற்றால், மற்ற எல்லா மாநிலங்களை விட தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இருந்து முதலில் மீண்டு வெளி வர முடியும்.

    ஆன்மீகத்திலேயே ஊறி வளர்ந்த கலாச்சாரம் 15 நாட்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருக்க முடியாதா? 15 நாட்கள் வேறு எந்த மனிதர்களுடனும் தொடர்பில்லாமல் இருந்தால் வைரஸ் கதை தானாக முடிந்துவிடும். அரசாங்கம் இதற்கு பல முயற்சிகள் எடுத்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்காது.

    தமிழ்நாடு எனக்கு கர்ம பூமியாக இருக்கிறது. நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது சேர வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக, ஈஷா தன்னார்வலர்கள் மிகவும் உறுதியாகவும் தெம்பாகவும் செயல் செய்து வருகிறார்கள். ஈஷா யோகா மையம் உலகின் மிக முக்கியமான யோகா மையமாக மாறியுள்ளது. தமிழ் மக்களின் தெம்பு, உற்சாகம் மற்றும் பக்தியால் இது நடந்துள்ளது.

    பாரத தேசத்திற்கு வேர் போல் தமிழ்நாடு இருக்கிறது. வேரில் பலம் வந்தால்தான் மரம் செழிப்பாக வளரும். இதனால், இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் நாம் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் சூரிய சக்தி என்ற எளிமையான யோகாவை இலவசமாக கற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு சத்குரு பேசினார்.

    கொரோனா காலத்தில் நுரையீரல் திறனை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் விதமாக ‘சிம்மக்ரியா’என்ற 2 நிமிட எளிய யோகப் பயிற்சியை சத்குரு வடிவமைத்துள்ளார். இதை கற்றுக்கொள்ள  கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.
    Next Story
    ×