search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறி வாங்கும் பெண்
    X
    காய்கறி வாங்கும் பெண்

    காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு

    கொரோனா பீதி காரணமாக காய்கறி, பழங்களை தொட்டுப்பார்த்து பொதுமக்கள் வாங்கக்கூடாது என வியாபாரிகள் கண்டிப்புடன் சொல்லி விடுகிறார்கள்.
    சென்னை:

    கொரோனா எனும் மூன்றெழுத்து கொடிய வைரஸ் தான் இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் சென்னையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகங்கள், பள்ளி விளையாட்டு மைதானங்களில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல தள்ளு வண்டிகள் மூலமாகவும் பொது மக்களை தேடி காய்கறி-பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் தேவையான காய்கறி, பழங்களை வாங்க முடிந்தாலும் ஏதோ ஒரு சலிப்பு பொதுமக்களிடம் இருப்பதை பார்க்க முடிகிறது. அப்படி என்ன சலிப்பு என்று யோசித்துப் பார்த்தால் நமக்கு வியப்புத்தான் ஏற்படுகிறது.

    எந்த பொருளாக இருந்தாலும் தரம் பார்த்து, சோதித்து, பேரம் பேசி வாங்குவதுதான் மக்களின் குறிப்பாக பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று. அதிலும் உணவுப் பொருட்களான காய்கறி-பழங்கள் என்றால் பெண்கள் கூடுதலாகவே விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள். மூட்டை மூட்டையாக காய்கறி குவிந்து கிடந்தாலும், தரமானவற்றை பொறுமையாக அலசி ஆராய்ந்து பொறுக்கி எடுப்பார்கள்.

    தற்போது கொரோனா பீதி காரணமாக காய்கறி-பழங்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் பொதுமக்கள் கை படாதவாறு வியாபாரிகள் கண்டிப்பு காட்டுகிறார்கள். ‘எத்தனை கிலோ வேண்டும்? என சொல்லுங்கள், எடுத்துப்போடுகிறேன், தயவுசெய்து காய்கறி மீது கைவைக்க வேண்டாம்’, என வெளிப்படையாகவே வியாபாரிகள் சொல்லிவிடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதனால் வியாபாரிகள் அளந்துபோடும் காய்கறிகள் வாங்கி வீடு சேரவேண்டிய நிலைமை இருக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறி-பழங்கள் தேர்வு செய்யும்போது நல்லவற்றை பார்த்து பார்த்து தேர்வு செய்து பயன்படுத்துவோம். தற்போது அதற்கு அனுமதி இல்லை என்பதால், வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு காய்கறிகளை எங்களுக்கு கொடுக்கிறார்கள்.

    இதில் பல நேரங்களில் அழுகிய, தரமற்ற காய்கறியும் வந்துவிடுகிறது. இதுகுறித்து கேட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என வியாபாரிகள் கைவிரிக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி நல்ல பொருட்களை வாங்குவதாம், என்று சலிப்புடன் கூறுகிறார்கள்.

    ஒரு சிலர் காய்கறியை தொட்டு வாங்குவதால், பலர் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கவே யோசிக்கிறார்கள். ஏற்கனவே வியாபாரமில்லை என்ற சூழலில், தற்போது இந்தப் பிரச்சனையும் சேர்ந்து கொள்வதால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்களும் என்ன செய்ய?, என்று வியாபாரிகள் புலம்புகிறார்கள். இப்படி வியாபாரிகள், பொதுமக்கள் இடையே சில சங்கடங்களையும் கொரோனா பீதி ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.
    Next Story
    ×