search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் சின்னக்கடை வீதி ரோட்டில் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது
    X
    சேலம் சின்னக்கடை வீதி ரோட்டில் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது

    13 பேருக்கு கொரோனா தொற்று- சேலம் சின்னக்கடை வீதியில் கடைகள் மூடப்பட்டன

    சேலத்தில் சின்னக்கடை வீதி அருகே 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், சின்னக் கடை வீதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன.
    சேலம்:

    சேலம் சின்னக்கடை வீதியில் 200-க்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை மற்றும் பழக்கடைகள் உள்ளன. இந்த பகுதியையொட்டி உள்ள தெருக்களில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சின்னக்கடை வீதிக்கு பழங்களை ஏற்றி வரும் வாகனங்களில் இருந்து பழங்களை இறக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்களில் 5 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து சின்னக்கடை வீதி பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வியாபாரிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு கடைகளை மூட கால அவகாசம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து பழக்கடை வியாபாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகு தொற்று இல்லை என தெரிய வந்தால் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து நேற்று காலை சின்னக்கடை வீதி முழுவதும் உள்ள கடைகள் மூடப்பட்டன. சின்னக்கடை வீதியின் மெயின் ரோட்டில் தடுப்புகள் அமைத்து ‘சீல்‘ வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதி முழுவதும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதே நேரத்தில் சின்னக் கடை வீதியில் உள்ள மளிகை, காய்கறி, பழக்கடை வியாபாரிகளுக்கு நேற்று காலை பாவடி பள்ளியில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×