search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோவில்பட்டியில் தினசரி காய்கறி சந்தைகள் 3 நாட்களுக்கு மூடல்

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்பட்டியில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தினசரி காய்கறி சந்தைகள் மூடப்படுவதாக நகரசபை ஆணையாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என போலீசாரும், நகரசபை நிர்வாகத்தினரும் ஆங்காங்கே ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

    கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், பொருட்களை வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிகிறார்களா? என அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாத ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டறியப்படும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    தற்போது, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியின் உத்தரவுப்படி கோவில்பட்டி நகரசபை பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்களுக்கு காந்தி மைதானம் மற்றும் புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகம் ஆகியவற்றில் செயல்படும் தற்காலிக தினசரி காய்கறி சந்தைகள் மூடப்படுகிறது.

    சந்தைகளில் தொடர்ந்து 3 நாட்களும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினியும் தெளிக்கப்படும். 6-ந்தேதி(திங்கட்கிழமை) முதல் காய்கறி சந்தைகள் செயல்படும், என நகராட்சி ஆணையர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×