search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்கட்டணம் செலுத்த அவகாசம் ரத்து
    X
    மின்கட்டணம் செலுத்த அவகாசம் ரத்து

    மின்கட்டணம் செலுத்த ஜூலை 31 வரை அவகாசம் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

    மின் கட்டணம் செலுத்த ஜூலை 31-ந்தேதி வரை அவகாசம் வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
    சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சி.ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் மக்களின் பணப்புழக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

    இந்நிலையில், மின் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பை துண்டிக்க தடை விதிக்க வேண்டும். மின்கட்டணம் செலுத்த ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.ராஜேஷ், ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவருகிறது. எனவே, வெளி மாவட்டங்களிலும் மின் கட்டணத்தை செலுத்த ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

    அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் வெளி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது. ஏற்கனவே 75 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்தியுள்ளனர் என்று கூறி அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுவரை மின் கட்டணம் செலுத்தப்பட்ட விவரங்கள், தமிழக அரசின் நிலைப்பாடு ஆகியவை குறித்து நாளை (இன்று) தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘ஏற்கனவே 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர் கட்டணம் செலுத்தி விட்டனர்’’ என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தமிழக அரசின் தகவலை ஏற்று உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
    Next Story
    ×