search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவாசல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
    X
    தலைவாசல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

    சேலம் மாவட்ட கிராமங்களில் 3,900 கோவில்கள் திறப்பு- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம்

    சேலம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள 3,900 கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை 6 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் வசதிக்காக அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது.

    அதன்பிறகு ஏப்ரல் மாதம் முதல் மற்ற கடைகளை திறக்கவும், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்கவும், பஸ்கள் ஆட்டோ, கார் இயக்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனிடையே, தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலித்த தமிழக அரசு நேற்று முதல் நகர்ப்புறங்களை தவிர்த்து கிராம புறங்களில் மட்டும் அதுவும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வருமானம் குறைவாக உள்ள கோவில்களை மட்டும் திறக்கலாம் என அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான கோவில்களை திறந்து பூஜை நடத்தப்பட்டது.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 2 ஆயிரம் கோவில்களும், கட்டுப்பாட்டில் இல்லாமல் சுமார் 5 ஆயிரம் கோவில்களும் உள்ளன. கிராமப்புறங்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வருமானத்திற்கு குறைவாக உள்ளதாக 3,900 கோவில்கள் உள்ளன. நகர்ப்புறங்களில் 1,100 கோவில்கள் அமைந்துள்ளன. தமிழக அரசின் உத்தரவின் படி, சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நேற்று 3,900 கோவில்கள் திறக்கப்பட்டன.

    கடந்த 100 நாட்களுக்கு பின்பு கோவில்கள் திறக்கப்பட்டதை அறிந்த பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். குறிப்பாக தலைவாசல் சமயபுரம் மாரியம்மன் கோவில் நேற்று திறக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், மணி விழுந்தான் வடக்கு கிராமத்தில் அம்மனுக்கு மண்டல பூஜையையொட்டி, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.

    அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதேநேரத்தில் கோவிலில் பஜனை செய்தல், பாடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. உள்ளே செல்லும் முன் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும், புனிதநீர் வழங்கக்கூடாது, தேங்காய், பூக்கள், பழம் எடுத்து செல்ல அனுமதி கிடையாது, கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டமாக நின்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனை கோவில்களை நிர்வகிக்கும் நபர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    100 நாட்களுக்கு பின்பு கோவிலுக்கு சென்ற சில பெண்கள், உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் எனவும், நோய் தொற்றில் பாதிப்புக்குள்ளான நபர்கள் அனைவரும் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் எனவும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து கிராம பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறியதாவது:-

    கிராமங்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வருமானத்திற்கு கீழ் உள்ள கோவிலை மட்டும் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை வரவேற்கிறோம். அதேபோல் நகர்ப்புறங்களிலும் உள்ள கோவில்களை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருமிநாசினி, பூசாரிகளுக்கு கையுறை வழங்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மட்டுமே இந்த உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களுக்கும் பக்தர்களுக்கு வழங்க கிருமி நாசினியும், பூசாரிகள் பயன்படுத்த கையுறைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே கோவில் பூசாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. ஆனால் கோவில் பூசாரிகளின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேலும் ரூ.5 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×