search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியை கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
    X
    கோட்டப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியை கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    தர்மபுரி மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை

    தர்மபுரி மாவட்டத்திற்குள் ‘இ-பாஸ்‘ இல்லாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்தார்.
    தர்மபுரி:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து உரிய அனுமதி பெறாமல் தர்மபுரி மாவட்டத்திற்குள் நுழைபவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியை கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- தர்மபுரி மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளின் வழியாக ‘இ-பாஸ்‘ உள்ளவர்கள் மட்டுமே வர வேண்டும். இவ்வாறு வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தர்மபுரி செட்டிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

    இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். ‘இ-பாஸ்‘ பெறாமல் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக காவல் துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை மூலம் தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், உதவி கலெக்டர் பிரதாப், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி, தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×