search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையான ஜெயக்குமார்
    X
    கொலையான ஜெயக்குமார்

    நாமக்கல்லில் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை

    நாமக்கல்லில் ‘ஸ்டிக்கர்’ கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்ம ஆசாமிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் கூலிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜெயக்குமார் அதே பகுதியில் வாகனங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் மற்றும் கண்ணாடி கடை நடத்தி வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ஸ்கூட்டரில் சென்ற ஜெயக்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் பயங்கர வெட்டு காயங்களுடன் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியில் சென்றவர்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசும் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயக்குமாரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இதேபோல் மோப்பநாய் பொய்கையும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிசென்ற நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் ஜெயக்குமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜெயக்குமாரிடம் தனது மொபட்டை ரூ.15 ஆயிரத்திற்கு அடமானம் வைத்து இருப்பதும், அதற்கான ஆர்.சி.புத்தகத்தை கொடுக்காததால் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    எனவே இந்த முன்விரோதத்தில் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த டான் சரவணன், பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே பழையபாளையம் ஏரிக்கரை முட்புதரில் இருந்து ஜெயக்குமார் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2008-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சந்திரகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிக்கிய ஜெயக்குமார் பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். 
    Next Story
    ×