search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகன்குளத்தில் கிடைத்த காசுகள்
    X
    அழகன்குளத்தில் கிடைத்த காசுகள்

    பழங்கால வணிக தொடர்புக்கு ஆதாரமாக அழகன்குளத்தில் கிடைத்த காசுகள்

    பழங்கால வணிக தொடர்புக்கு ஆதாரமாக அழகன்குளத்தில் கிடைத்த காசுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் அழகன்குளம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வக்கீல் அசோகன் என்பவரது முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை அறிந்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பழங்கால நாணயங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் இதுகுறித்து ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வுகள் மூலம் இந்த ஊர் சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்த துறைமுகமாகவும், வணிக மையமாகவும் இருந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அழகன்குளத்தில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காசுகள் மூலம் இந்த ஊரின் வெளிநாட்டு வணிகத்தொடர்பு இருந்துள்ளதை நிரூபிக்கிறது.

    ராஜராஜசோழன் காலத்தை சேர்ந்த ஈழக்காசு, இந்திய, இலங்கை, இங்கிலாந்து நாட்டு வெள்ளி, செப்புக்காசுகள், திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட வெள்ளிக்காசு ஆகியவை இதில் முக்கியமானவை. இங்கு கிடைத்த ஈழக்காசு முதலாம் ராஜராஜசோழன் இலங்கையை வென்ற பிறகு வெளியிட்ட காசு ஆகும். இது தேய்ந்த நிலையில் உள்ளது. ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன.

    இதேபோல திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட வெள்ளிக்காசின் ஒருபுறம் சங்கும், மறுபுறம் பணம் ஒன்று என மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. இதில் 1096 எனும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இது கொல்லம் ஆண்டு எனப்படும் மலையாள ஆண்டு ஆகும். இதனுடன் 825- ஐ கூட்டி தற்போதைய ஆண்டு கணக்கிடப்படுகிறது. இக்காசு திருநாள் ராமவர்மா என்ற திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் 1921-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அந்த மன்னரை குறிக்க ஆர்.வி. என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதுதவிர இலங்கை சதம் காசுகளில் தமிழ், சிங்களத்தில் சதம் என எழுதப்பட்டுள்ளது. இவை 1929 முதல் 1944 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக்காசுகள் ஆகும். இதில் இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனை எனும் மரத்தின் படம் உள்ளது. தற்போதும் இலங்கையின் பணத்தாள்களில் தாளிப்பனையின் படம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

    மேலும் விக்டோரியா மகாராணி, 5-ம், 6-ம் ஜார்ஜ் மன்னர் ஆகியோர் காலத்தை சேர்ந்த வெள்ளி நாணயங்கள், 7-ம் எட்வர்டு மன்னர் 1909-ல் வெளியிட்ட கிரேட் பிரிட்டனில் புழக்கத்தில் இருந்த பென்னி நாணயம் ஆகியவையும் இதில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×