search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த தந்தை-மகன்
    X
    உயிரிழந்த தந்தை-மகன்

    சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் நடக்கக்கூடாது- நீதிபதிகள்

    சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    மதுரை:

    சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இதையடுத்து நீதிமன்றத்தில் 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர்.

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?. கேஸ் டைரி குறித்த முக்கியமான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கைதான ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த அனுமதி அளித்தனர்.

    5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட தந்தை, மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கை அமைந்துள்ளது என்றனர்.

    மேலும் சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கை முன்னேறிய நிலையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது இயல்புக்கு மாறானது. 24 மணிநேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்ததன் மூலம் தமிழக காவல்துறையினர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது நீதிபதிகள் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினர். 
    Next Story
    ×