search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    கரூரில் கொரோனா நோயாளி உயிரிழப்பு- சிகிச்சை அளித்த போலி சித்த மருத்துவர் மீது வழக்கு

    கரூரில், கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக அவருக்கு சிகிச்சை அளித்த போலி சித்த மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த 47 வயதுடைய ஆண் ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் இறந்தவருக்கு கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் நொய்யல் குறுக்குச்சாலை பரமத்தி ரோட்டில் உள்ள சித்தா மருத்துவமனையில் வைத்து மருத்துவர் ராஜேஷ் என்கிற சண்முகம்(வயது 65) சிகிச்சை அளித்துள்ளார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு கரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பாக்கியலட்சுமிக்கு அவர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து டாக்டர் பாக்கியலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் ராஜேஷ் நடத்தி வரும் சித்த மருத்துவமனைக்கு சென்று சண்முகத்திடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மளிகைக்கடைக்காரருக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மேலும், சண்முகம் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் போலீசில் பாக்கியலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், ராஜேஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜேசுக்கு, 3 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஹோமியோபதி மருத்துவமும், மற்றொருவர் எம்.பி.பி.எஸ். படித்துள்ளனர். அவர்களும், தந்தையின் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் ராஜேசின் கிளினிக் மற்றும் அவர்கள் வசித்த வீட்டை தனிமைப்படுத்தியுள்ளனர்.

    மேலும், அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது தெரியவரும். ராஜேசுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென தெரிய வந்தால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த உள்ளனர். இந்தநிலையில் ராஜேஷ் குடும்பத்தினர், வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    Next Story
    ×