search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    லாரி மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழப்பு- ராமநாதபுரம் டிரைவர் கைது

    வாகன சோதனையின்போது லாரி மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-சென்னிமலை சாலையில் உள்ள திட்டுப்பாறை நொய்யல் ஆற்றுப்பாலம் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு 11 மணிக்கு சென்னிமலையில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

    இந்த லாரி நொய்யல் ஆற்றுப்பாலத்தின் மறுபுறமும் அமைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டம் சென்னிமலை போலீஸ் சோதனை சாவடியில் நிற்காமல் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி தூக்கி வீசி விட்டு மறுபுறம் வந்தது. மேலும் இந்த பகுதியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போலீசாரின் சோதனை சாவடியில் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூர் ஆயுதப்படை போலீஸ்காரரான பிரபு (வயது 23) தனது மோட்டார் சைக்கிளில் அந்த லாரியை துரத்தி சென்றார். பின்னர் ஆயுதப்படை போலீஸ்காரர் வேகமாக சென்று சாவடி பஸ் நிறுத்தம் அருகே அந்த லாரியை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது லாரி மோதியதில் பிரபு தலையில் பலத்த அடிபட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஆனாலும் அந்த லாரி நிற்காமல் சென்றதால் உயிரிழந்த பிரபுவின் உடலையும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து லாரி பற்றிய தகவல் வயர்லெஸ் மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லாரி சென்ற திசையை கண்காணிப்பு கேமராவில் கண்டறிந்து லாரியை வேகமாக துரத்தி சென்றனர். ஓடாநிலை பஸ் நிறுத்தம் அருகில் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து லாரியில் இருந்த டிரைவரை கீழே இறக்கி விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, விளத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (40) என தெரிய வந்தது. மேலும் இவர் குடிபோதையில் இருந்ததால் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×