search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்பாட்டு பகுதி
    X
    கட்டுப்பாட்டு பகுதி

    தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்- அரசு உத்தரவு

    தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அதை அமல்படுத்துவதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள கூடுதல் விவரங்கள் வருமாறு:-

    * திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் ஆட்கள் பங்கேற்க கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதுசார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.

    * 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வெளியில் வரலாமே தவிர மற்றபடி வீட்டிலேயே இருக்க வேண்டும்.

    * ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கான அபாயத்தை தவிர்க்கலாம். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதை உறுதி செய்யவேண்டும்.

    * ஒவ்வொருவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்களின் உடல் நிலையை தொடர்ந்து பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொருவரின் உடல் நிலையை சரியான நேரத்தில் அரசு அறிந்து அவர்களை அபாயத்தில் இருந்து மீட்க முடியும்.

    * பொது இடங்களுக்கு வரும்போதும், பயணத்தின்போதும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிக்கு குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி விடப்பட வேண்டும்.

    * பொது இடங்களில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும். என்றாலும், தேவையான பொருட்களை அங்குள்ள வீடுகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் வழங்குவதை அந்தப் பகுதிக்கான நிர்வாகம் உறுதி செய்யும்.

    * அங்கு நாளொன்றுக்கு இரண்டு முறை கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். அங்கு முககவசம் அணிவது மிக, மிகக்கண்டிப்பாக அமல்படுத்தப்படும். அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்டிப்புடன் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×