search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த தந்தை, மகன்
    X
    உயிரிழந்த தந்தை, மகன்

    சாத்தான்குளம் தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலம் -மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை

    சாத்தான்குளம் தந்தை, மகனை காவல்நிலையத்தில் விடிய விடிய லத்தியால் அடித்தது விசாரணையில் தெரியவந்திருப்பதாக மாஜிஸ்திரேட் அறிக்கையில் கூறி உள்ளார்.
    மதுரை:

    சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

    காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

    இந்நிலையில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தனது விசாரணை தொடர்பான விரிவான அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பி உள்ளார். அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை போலீசார் விடிய விடிய லத்தியால் அடித்தது சாட்சியம் மூலம் தெரியவந்திருப்பதாக கூறி உள்ளார்.

    ‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும்  விடிய விடிய லத்தியால் அடித்துள்ளனர். அவர்களை அடிப்பதற்கு பயன்படுத்திய லத்திகளை கேட்டபோது போலீசார் கொடுக்க மறுத்தனர். காவலர் மகாராஜனிடம் லத்தியை கேட்டபோது அவர் தர மறுத்ததுடன், முன்னுக்குப் பின் முரணாகவும் ஒருமையிலும் பேசினார். மற்றொரு காவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மீண்டும் மீண்டும் கேட்டபிறகே காவலர்கள் லத்தியை கொடுத்தார்கள். 

    இதுதவிர சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் போலீசார் நடந்துகொண்டனர்.  பெண் காவலர் ரேவதி தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது அச்சத்துடன் இருந்தார். உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தபிறகே அவர் சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட்டார். லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது.

    ரத்தக்கறை மற்றும் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தினமும் அழியும்படி செட்டிங் செய்யப்பட்டிருந்தது.

    விசாரணை நடைபெற்றபோது கூடுதல் எஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அந்த இடத்தில் இருந்தபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் விசாரணையை பாதியிலேயே நிறுத்தி விட்டு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்று மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×