search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த தந்தை-மகன்
    X
    உயிரிழந்த தந்தை-மகன்

    ஜெயராஜ்-பென்னிக்ஸ் கைது முதல் இன்று வரை...

    ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது, கைது நடவடிக்கை, அதன் பின்னர் நடந்தவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.
    கோவில்பட்டி:

    சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைதாகி, நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் இருந்த நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அவர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது, கைது நடவடிக்கை, அதன் பின்னர் நடந்தவை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.

    * 19-ந் தேதி இரவு 7.30 மணி:

    சாத்தான்குளத்தில் தனது செல்போன் கடையில் இருந்த ஜெயராஜை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

    * இரவு 8.30 மணி:

    இந்த தகவல் அறிந்ததும் அவரது மகன் பென்னிக்ஸ் தனது நண்பர்களுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

    * இரவு 10 மணி:

    ஜெயராஜூம், பென்னிக்சும் “தங்களை வெளியில்விட யாராவது உதவுங்களேன்” என கதறியதை போலீஸ் நிலையம் பகுதியில் நின்றிருந்த பென்னிக்சின் நண்பர்கள் கேட்டதாக தெரிவித்தனர்.

    * 20-ந் தேதி காலை 7 மணி:


    காயம் அடைந்து இருந்த ஜெயராஜ், பென்னிக்சை மருத்துவ பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் சார்பில் ஆஸ்பத்திரியில் கொடுக்கப்பட்ட தகவலில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் தங்களது கடை முன்பு தரையில் உருண்டு தகராறில் ஈடுபட்டதால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    * காலை 9 மணி:

    போலீசாரின் தகவலை விபத்து அறிக்கையாக அரசு டாக்டர் வெண்ணிலா பதிவு செய்கிறார். பின்னர், பென்னிக்சின் கால் பாதம் வீக்கம், ஆள்காட்டி விரலில் காயம், இடுப்பின் பின்பகுதியில் 0.2 x 0.1 சென்டி மீட்டர் அளவுக்கு வீக்கம் இருந்ததாக டாக்டர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 1½ மணி நேரம் பென்னிக்சை அந்த மருத்துவமனையிலேயே வைத்துள்ளார்கள். அடுத்ததாக ஜெயராஜை பரிசோதித்து தயாரித்த அறிக்கையில், ஜெயராஜ் இடுப்பின் பின்பகுதியில் 2 x3 சென்டி மீட்டர் அளவுக்கு வீக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

    * பகல் 11.25 மணி:

    சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் தந்தை-மகனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

    * பிற்பகல் 2 மணி:

    பின்பு, 108 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி சப்-ஜெயிலுக்கு ஜெயராஜ்-பென்னிக்ஸ் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    * ஜூன் 22-ந் தேதி:

    இரவு 7.30 மணி அளவில் பென்னிக்ஸ் உடல்நிலை மோசமானதால் ஜெயிலில் இருந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர் பாலசுப்பிரமணியன், பென்னிக்ஸ் உடல்நிலை மோசமாக இருப்பதை அறிந்ததுடன், அவரது பின்பகுதியில் 25x20 செ.மீ. மற்றும் 20 x 20 செ.மீ. அளவில் பெரிய காயங்கள் இருந்ததை பதிவு செய்து, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க கூறியுள்ளார். ஆனால், சற்று நேரத்தில் பென்னிக்ஸ் இறந்துவிட்டார்.

    * ஜூன் 23-ந் தேதி:

    பின்னர் அவரது தந்தையையும் அதே மருத்துவமனையில் அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் உறவினர்கள், சாத்தான்குளம் மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கினர்.

    சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து போலீசாரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    * ஜூன் 23-ந் தேதி மதியம்:

    தனது கணவர்-மகன் உடல்களை 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஜெயராஜின் மனைவி செல்வராணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி, 3 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தாமாக முன்வந்து விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

    * ஜூன் 24-ந் தேதி:

    இந்த சம்பவத்தை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையை கோர்ட்டு தீவிரமாக கண்காணிக்கும் என தெரிவித்தது.

    * ஜூன் 26-ந் தேதி:


    அடுத்தகட்ட விசாரணையின் போது கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு, சாத்தான்குளத்தில் முகாமிட்டு சாட்சிகளிடமும், போலீஸ் நிலையத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், கோவில்பட்டி சிறையிலும் விசாரணை நடத்தி ஆவணங்களை திரட்டவும் உத்தரவிட்டது.

    * ஜூன் 27-ந் தேதி:

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சென்று கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை பதிவு செய்தார்.

    * ஜூன் 28-ந் தேதி:

    ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரைப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நடத்திய விசாரணை விடிய விடிய நடைபெற்றது.

    சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    * ஜூன் 29-ந் தேதி:

    சி.பி.ஐ. விசாரணை பரிந்துரை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் மாஜிஸ்திரேட்டு அளித்த தகவலை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி கூடுதல் சூப்பிரண்டு குமார், துணை சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்ததுடன், அவர்களை இன்று ஆஜராகவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    Next Story
    ×