search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வெவ்வேறு விபத்துகளில் என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி

    குஜிலியம்பாறை, பழனி, தாடிக்கொம்பு ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் என்ஜினீயர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்துபோயினர்.
    குஜிலியம்பாறை:

    குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்பவர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் வேலை தொடர்பாக கோட்டாநத்தத்தில் இருந்து பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கார்த்திக் பலத்த காயமடைந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேனை ஓட்டிச் சென்ற திருச்சி சோமரசன்பேட்டையை சேர்ந்த குமார் என்பவர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் பழனி பொன்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிதீஷ்குமார் (19). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மடத்துக்குளத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பழனிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். சுக்கமநாயக்கன்பட்டி அருகே வந்த போது, அந்த வழியாக நடந்து சென்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் மீது எதிர்பாராதவிதமாக நிதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபர் இறந்துவிட்டார். அவர் யார் என்று தெரியவில்லை. இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாடிக்கொம்புவை அடுத்த விராலிப்பட்டி புதூரை சேர்ந்தவர் வைத்தியாபிள்ளை (70). இவர் தனது மொபட்டிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்றார். அங்கு வைத்தியாபிள்ளை சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்று மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் வந்த வைத்தியாபிள்ளை தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வைத்தியாபிள்ளை இறந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×