search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த மகன்-தந்தை
    X
    உயிரிழந்த மகன்-தந்தை

    சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன?- நீதிபதிகள் நேரில் விசாரணை

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா ஆகியோர் நேற்று காலை 9.30 மணியளவில் கோவில்பட்டி கிளை சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பணியில் இருந்த சிறை வார்டன் சங்கர் மற்றும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த தினத்தில் பணியில் இருந்த சிறை காவலர்கள் ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் சிறையில் இருந்த ஆவணங்களையும், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 4¾ மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் மதியம் 2.15 மணியளவில் மாஜிஸ்திரேட்டுகள் அங்கிருந்து வெளியே வந்தனர். பின்னர் 3 மணியளவில் மீண்டும் கோவில்பட்டி சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைதானது முதல் உயிரிழந்தது வரை காவல்நிலையத்தில் என்ன நடந்து என போலீசாரிடம் விசாரித்து ஆவணங்களையும் நீதிபதிகள் சரிபார்த்து வருகின்றனர்.
    Next Story
    ×