search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஐகோர்ட்
    X
    மதுரை ஐகோர்ட்

    காவல்துறை தாக்குதல் கொரோனா போன்ற நோய்த்தொற்று- ஐகோர்ட் மதுரை கிளை

    சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும் நீதிமன்றத்தை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    மதுரை:

    கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘விசாரணைக் கைதி மரணம் போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்காக காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை மற்றும் மாவட்ட எஸ்பி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அதன்படி தூத்துக்குடி எஸ்.பி. இன்று நிலையை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை, அவர்கள் மீதான குற்றச்சாட்டு விவரம், விசாரணை மற்றும் எந்த சூழ்நிலையில் அவர்கள் இறந்தார்கள்? என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    பின்னர் விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:- காவல்துறையினரால் தாக்கப்படுவது கொரோனா போல மற்றொரு நோய்த்தொற்று. தந்தை மகன் இறந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும், நீதிமன்றத்தை குறைவாக மதிப்பிடவேண்டாம். கூடுதல் மன அழுத்தத்தில் காணப்படும் போலீசாருக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்துறை செயலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு போலீசுக்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும்.தந்தை மகன் இறந்தது குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    மேலும் அனைத்து சிசிவிடி பதிவுகளையும் சேககரித்து பாதுகாப்பாக வைக்க கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு உத்தரவிடப்பட்டது. கோவில்பட்டி கிளைச்சிறையின் பதிவேடுகள், மருத்துவ பதிவேடுகளை புகைப்படம் எடுத்து வைக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×