search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவையில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனாவுக்கு பலி

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் பலியானார்.
    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர், திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி இருந்து 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் திரும்பினார்.

    அதன் பின்னர் அவர் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து அவருக்கு சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.

    இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    ஆனால் கொரோனா தொற்றால் அவர் இறந்ததால் அவரது உடலை பார்ப்பதற்கும், உடலை தொடுவதற்கும் உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து அங்குள்ள வளாகத்தில் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை, சுகாதாரத்துறை ஊழியர்கள் மிகவும் பாதுகாப்புடன் கோவையில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு தகனம் செய்யப்பட்டது.

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது முதல் சம்பவமாகும். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×